வேலூர் மாநகருக்குள் பேருந்துகள் இயக்கப்படும் முக்கிய சாலைகளில் ஒன்று வேலூர் - ஆரணி சாலை. இதில் ஓட்டேரி பேருந்து நிறுத்தத்தில் நின்ற அரசுப் பேருந்தில் அதிகப்படியான கல்லூரி மாணவ, மாணவிகள் ஏறினர். அப்போது பேருந்தில் இருந்த மூதாட்டி ஒருவர் கீழே இறங்கிக்கொண்டிருக்கும் போதே பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார்.
இதனால் கூட்டத்தில் சிக்கிய மூதாட்டி நிலை தடுமாறி கூட்டத்தோடு இழுத்து செல்லப்பட்டு கீழே விழுந்துள்ளார். மறுபுறம் மாணவிகள் பேருந்தில் ஏற முடியாமல் பின்னால் ஓடியுள்ளனர். இதனை சற்றும் கண்டுகொள்ளாத அரசுப் பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
கீழே விழுந்த மூதாட்டியை பின்னாடி வந்த கல்லூரி மாணவிகள் மீட்டுள்ளனர். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அவருக்கு தண்ணீர் குடிக்கத் தந்து அங்கிருந்து வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். அரசுப் பேருந்து ஓட்டுநரின் இத்தகைய செயல் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.