கோப்புப்படம்
கடலூர் மாவட்டம் நல்லூர் மணிமுத்தாற்றங்கரையில் வில்வனேஸ்வரர் கோவில் என்ற பிரபலமான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் பகுதியில் மணிமுத்தாறு, கோமுகியாறு ஆகிய இரண்டு ஆறுகளும் இணைகிறது. அப்பகுதியில் கடந்த 18 ஆம் தேதி ஒரு மூதாட்டியின் சடலம் ஒன்று முகம் சிதைந்த நிலையில் கிடந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள் சடலத்தை பார்த்துவிட்டு வேப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண் யார்? அவர் எப்படி இங்கு வந்தார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலையா கொலையா? என இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ராஜேந்திரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
திட்டக்குடி புது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மணிமேகலை. இவர் பெரம்பலூர் மாவட்ட எல்லையில் உள்ள அகரம் சீகூர்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பொறுப்பாளராக வேலைசெய்து வந்துள்ளார். அந்த மையத்தில் சமையல் உதவியாளராக வேலை செய்து வந்தவர் 65 வயது நல்லம்மாள். இவர் பணியில் இருந்த காலத்தில் ராஜேந்திரன் வீட்டிற்கு அடிக்கடி வந்து வீட்டு வேலை செய்துள்ளார். அப்போது நல்லம்மாள் ராஜேந்திரன் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது முறையற்ற தொடர்பாக மாறியது. இந்நிலையில் ராஜேந்திரன் மனைவி உடல்நிலை சரியில்லாமல் வெளியூரில் வசித்து வந்துள்ளார். ஒருபக்கம் ராஜேந்திரனுக்கு கடன் சுமை அதிகரித்து இருந்தது.
நல்லம்மாளுடன் வைத்துள்ள உறவின் அடிப்படையில் அவர் ஓய்வுபெற்ற பிறகு கிடைத்த பென்ஷன் பணம், நகைகளை தான் கடனை அடைப்பதற்காக கேட்டுள்ளார் ராஜேந்திரன். ஆனால் நல்லம்மாள் தர மறுத்துள்ளார். இதனால் நல்லம்மாள் மீது கோபத்தில் இருந்த ராஜேந்திரன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இந்நிலையில் நல்லம்மாள் தனக்கு மனநிலை சரியில்லை எனவே நல்லூரில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட வேண்டும் என்று ராஜேந்திரனிடம் கூறியுள்ளார். அவரிடம் அன்பாக பேசிய ராஜேந்திரன் அவரை நல்லூர் சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். நல்லம்மாளைக் கொலை செய்ய நேரம் பார்த்திருந்த ராஜேந்திரன் அருகில் உள்ள மணிமுத்தாற்றங்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளார்.
தாக்குதலில் நல்லம்மாள் சுயநினைவை இழந்து கீழே விழுந்ததும் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயின், காது கம்மல் ஆகியவற்றை கழட்டி எடுத்துக்கொண்டு அங்கு கிடந்த ஒரு கல்லை எடுத்து நல்லம்மாள் முகத்தில் போட்டு அவரை கொலை செய்துவிட்டு ராஜேந்திரன் தப்பி சென்று விட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் ராஜேந்திரனை தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்குபதிவு செய்த வேப்பூர் போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் செம்புலிங்கம் சந்திரா மற்றும் தனிப்பிரிவு போலீசார் விரைந்து கொலையாளியைக் கைது செய்துள்ளதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் பாராட்டியுள்ளார். நல்லூர் மணிமுத்தாற்றங்கரை பகுதியில் பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.