வரலாற்றில் பல நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டது வேலூர் மாவட்டம். அந்த வரலாற்றில் பிரியாணிக்கும் மிக முக்கிய பங்குண்டு. ஆம்பூர் பிரியாணி என்றால் இந்தியா முழுவதும் பிரபலம். வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான பிரியாணி ஹோட்டல்கள் உண்டு.ஆம்பூர், வாணியம்பாடி வழியாக கார்களில், வேன்களில் செல்லும் பயணிகள் மதிய உணவாக பிரியாணி சாப்பிடுவது போல் திட்டமிட்டே வருவார்கள். வார இறுதி நாட்களில் இங்கு கூட்டம் அலைமோதும். அந்தளவுக்கு பிரியாணி பிரியர்கள் அதிகம்.
தற்போது தேர்தல் நடைபெறுகிறது. பிற மாவட்டங்களை சேர்ந்த அரசியல் கட்சியினர் தொகுதிக்குள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான உணவு அவர்கள் தங்கும் இடத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தாலும் மதியத்தில் ஹோட்டல் பிரியாணியை விரும்புகின்றனர். இதற்காக சிறிய ஹோட்டல்கள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை மதிய நேரங்களில் கட்சியினர் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இதனால் ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் நகரங்களில் மதியம் 3 மணி வரை இருக்கும் பிரியாணி ஹோட்டல்கள் இரண்டு மணிக்கெல்லாம் காலியாகி விடுகிறது.
சில கடைகளில் பீஸ் இல்லாத பிரியாணி ( குஷ்கா ) தான் இருக்கிறது எனச்சொல்வதால், இந்த வழியாக செல்லும் பிரியாணி பிரியர்கள் ஏமாந்து செல்கிறார்கள் என்கின்றனர் ஹோட்டல் உரிமையாளர்கள். உள்ளூர் பிரியாணி பிரியர்களும் விரும்பிய நேரத்தில் முன்பு போல் பிரியாணி சாப்பிட முடியவில்லை. குஷ்கா தான் கிடைக்கிறது என புலம்புகிறார்கள். அதிகமாக பிரியாணி செய்யலாம்மே என சில கடைக்காரர்களிடம் நாம் கேட்ட போது, தரம் முக்கியம். அதனால் நாங்கள் குறிப்பிட்ட அளவுக்கு தான் எப்போதும் செய்வோம். அதிகபட்சமான நபர்களுக்கு செய்ய வேண்டும்மென்றால் தனியாக சமையலரை வைத்து தான் சமைத்துக்கொள்ள சொல்லிவிடுவோம் என்கிறார்கள்.