Skip to main content

மூன்று நாட்களாக பசி மயக்கத்தில் கிடந்த முதியவர்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

The old man was starving for three days

 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் மேலபூவாணி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள உறவினரை தேடி வந்திருக்கிறார். அங்கு அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்படவே அதன் காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று இருக்கிறார். அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் இங்கேயே சிகிச்சையில் இருக்குமாறு மருத்துவர்கள் கூறி உள்ளனர். ஆனால் அவர், சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று இருக்கிறார். 


மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவரால் மேற்கொண்டு நடந்து செல்ல முடியாமல் மருத்துவமனைக்கு எதிரே இருந்த ஒரு மரத்தடியில் படுத்து கிடந்துள்ளார். மூன்று நாட்களுக்கும் மேலாக உணவு அருந்தாமல் அதே இடத்தில் கிடந்துள்ளார். இந்த நிலையில் தற்செயலாக அவரது நிலையை பார்த்த ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த பத்திரிகை நண்பர்கள் அவருக்கு உதவி செய்து அவரை தற்போது ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உறவினர்களை தேடி தகவல் கொடுக்குமாறு ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தின் மூலமாக குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் கவனிப்பார் இன்றி கிடந்த முதியவருக்கு உதவி செய்து மருத்துவ சிகிச்சை ஏற்பாடு செய்த பத்திரிகையாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்