சென்னை – பல்லாவரத்தில் தற்கொலை செய்வதற்காக மின்சார ரயில் முன்பாக பாய்ந்த முதியவர் தண்டவாளத்தின் நடுவில் சிக்கிக்கொண்டார். அவர் பத்திரமாக மீட்கப்படும் செல்போன் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமழிசையைச் சேர்ந்த ரவி (வயது 66) நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக பல்லாவரம் வந்தார். மீண்டும் வீடு திரும்ப பல்லாவரம் ரயில்நிலையம் நோக்கி நடந்துவந்தார். அப்போது சென்னையில் இருந்து தாம்பரம் நோக்கிவந்த மின்சார ரெயில் முன்பாக பாய்ந்திருக்கிறார். இதைப் பார்த்த மின்சார ரெயில் ஓட்டுநர் ரெயிலை நிறுத்த முயன்றுள்ளார். ஆனாலும் ரயில் வேகம் குறைந்து முதியவர் கிடந்த இடத்தைத் தாண்டியபிறகே மெதுவாக நின்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரயில் ஓட்டுநர் உள்ளிட்ட பயணிகள் அச்சத்தில் ரயிலில் இருந்து இறங்கிப் பார்த்தபோது, முதியவர் இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே ரயிலின் அடியில் காயமின்றி கிடந்துள்ளார். அவரை வெளியேற்ற பொதுமக்கள் முயன்றுள்ளனர். நடைமேடை அருகில் இருந்ததால் அவர்களால் முடியவில்லை. எனவே, முதியவரை தவழ்ந்து வருமாறு கூறினார்கள். 15 நிமிட போராட்டத்திற்குப் பிறகு ரயில் அடியிலிருந்து மீண்டு வெளியேறினார் ரவி. அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவத்தால், 20 நிமிடங்கள் தாமதமாக மின்சார ரயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம் இருப்புப்பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.