Skip to main content

காதலியைச் சந்திக்கச் சென்ற கல்லூரி மாணவன்; அவமானத்தால் தூக்கில் தொங்கிய துயரம்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

A college student who went to meet his girlfriend  passed away

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்  முருகானந்தம். இவருடைய மனைவியின் பெயர் தேவி. இந்தத் தம்பதியின் 18 வயது மகன் ஜீவசூர்யா. மதுரையில் உள்ள அல்ட்ரா கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். ஜீவசூர்யா பள்ளியில் படிக்கும் போது கழுகேர்கடை பகுதியைச் சேர்ந்த ஆசிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பள்ளிப்பருவக் காதல் கல்லூரியிலும் தொடர்ந்துள்ளது. தன் காதலியான ஆசிகாவை கழுகேர்கடை பகுதியில் வைத்து சந்திப்பதை ஜீவசூர்யா வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால்  கழுகேர்கடை பகுதிக்கு சென்று ஆசிகாவை சந்தித்துப் பேசியுள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆசிகாவின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து, தன் மகள் ஒரு பையனுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஜீவசூர்யாவைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல், ஜீவசூர்யாவின் டூவீலர் மற்றும் செல்போன் ஆகியவற்றைப்  பிடுங்கிக் கொண்டனர். அதைத்தொடர்ந்து,  ஜீவசூர்யாவை அன்றிரவு காரில் கூட்டி வந்து, திருப்புவனத்தில் இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. தன்னைப் பொதுஇடத்தில் பலபேர் முன்னிலையில் கட்டிவைத்து தாக்கியதால் ஜீவசூர்யாவுக்கு மிகுந்த மனஅழுத்தம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், அவமானம் தாங்க முடியாத ஜீவசூர்யா தனது வீட்டின் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறிதுநேரம் கழித்து ஜீவசூர்யாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளனர். தன் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்கேயே கண்ணீர்விட்டுக் கதறினர்.

 

அதன் பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஜீவசூர்யாவின் உடலை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஜீவசூர்யாவின் தாயார் தேவி கொடுத்த புகாரின் பேரில், ஜீவசூர்யாவின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, திருப்புவனம் மருத்துவமனை வளாகத்தில் ஜீவசூர்யாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து, ஜீவசூர்யாவின் உறவினர் சுரேஷ் என்பவர் பேசும்போது, “ஜீவசூர்யாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. ஆனால், சம்பந்தப்பட்டவர்களிடம் இதுவரை எந்த விசாரணையும் நடத்தவில்லை” எனத் தெரிவித்தார். இதையடுத்து, ஜீவசூர்யாவின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானம் செய்தனர். காதலியைச் சந்திக்க சென்ற கல்லூரி மாணவனை அடித்து அவமானப்படுத்தியதால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்