சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.