சூடு செய்யப்பட்ட பழைய பிரியாணியை சாப்பிட்ட 5 வயது குழந்தை இறந்த சம்பவம் அரக்கோணத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் தண்டலம் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். கூலி தொழிலாளியான சீனிவாசன் அவரது உறவினர் ஒருவரின் தாயின் 16 ஆம் நாள் விழாவிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அந்த நிகழ்வில் சிக்கன் பிரியாணி சமைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் மீதம் இருந்த பிரியாணியை கொண்டுவந்து வீட்டில் ஃபிரிட்ஜில் வைத்துள்ளார் சீனிவாசன்.
அடுத்தநாள் அந்த பிரியாணியை சீனிவாசனின் 5 வயது மகள் கோபிகாவிற்கும் மற்றும் அவரது தம்பியான ஐயப்பனுடைய மூன்று குழந்தைகளுக்கும் சூடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சூடு செய்யப்பட்ட பழைய பிரியாணியை முதலில் சாப்பிட்ட சிறுமி கோபிகாவிற்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து சிறுமியின் வாயில் நுரை தள்ள அதிர்ந்த பெற்றோர்கள் சிறுமி கோபிகாவை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மீதம் உள்ள 3 குழந்தைகளும் உடல்நலம் பாதிக்க அவர்களுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிறுமி கோபிகா இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 3 குழந்தைகளுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக உணவுகளை, குறிப்பாக அசைவ உணவுகளை காலக்கெடு தாண்டிய பிறகு சூடு செய்து சாப்பிடுவது தீமை என்பதை உணராததால் நடந்த இந்த உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.