சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது, 1967-லிருந்து சுதந்திரா கட்சி ஒருமுறையும், காங்கிரஸ் 2 முறையும், அதிமுக 4 முறையும், மதிமுக 3 முறையும், சிபிஐ ஒருமுறையும் வென்றன. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு இத்தொகுதியில் காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒருமுறையும் வெற்றி பெற்றன.
ஆக, 5 முறை அதிமுக வென்ற இத்தொகுதியை இப்போது கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறது. ஆம். தொகுதி ஒதுக்கீட்டின்போது, விடாப்பிடியாக விருதுநகர் தொகுதியை அதிமுக தலைமையிடம் கேட்டு வாங்கியிருக்கிறது தேமுதிக.
வேட்பாளரைத் தேட வேண்டிய தடுமாற்றத்தில் இருந்ததால், வழக்கம்போல் இத்தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்து அறிவிக்கப் போகிறது திமுக. முன்னாள் எம்.பி. மாணிக்கம்தாகூர்தான் இத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்டது. தேமுதிக போட்டியிடுவதால், கதர்ச்சட்டையினர் குஷியாகி விட்டனர்.
இரட்டை இலை வாக்காளர்கள் அதிகம் உள்ள விருதுநகர் தொகுதி ஒதுக்கீட்டின்போது தேமுதிகவுக்குப் போனது அதிமுகவினருக்கு அதிர்ச்சி என்றால், அமமுகவினருக்கு ஏனோ மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. தேர்தல் நாளில் இறுதி எஜமானர்களாக வாக்காளர்கள் இருக்கும்போது, அதிர்ச்சியோ, மகிழ்ச்சியோ, குஷியோ எல்லாமே தற்காலிகமானவைதான்.