சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த வழக்கு கடந்த 14 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு, சிபிசிஎல் நிறுவனம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீனவர்கள் தரப்பு என 4 தரப்பினரும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். மீனவர்கள் தரப்பில் வாதத்தை முன்வைக்கையில், “மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படாமல் எண்ணெய்ப் படலம் அகற்றப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. சிபிசிஎல் நிறுவனம் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் சுமார் 33 டேங்கர்களில் தலா 220 லிட்டர் என்ற வீதத்தில் 7600 லிட்டர் எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. எண்ணெய்க் கழிவுகள் அகற்றும் பணிக்காக 75 அதிநவீன படகுகள், 4 ஜேசிபிகள், 2 ஆயில் ஸ்கிம்மர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், “மணலி தொழிற்சாலை சங்கங்கள் எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபடாதது அதிருப்தி அளிக்கிறது. மீனவர்களே எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபடும்போது, மணலி தொழிற்சாலை சங்கங்களும் பணியில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (21.12.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் படர்ந்திருந்த எண்ணெய்க் கழிவுகளால் காட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், தாழங்குளம், நெட்டுக்குப்பம், வ.உ.சி. நகர், உலகநாதபுரம், சத்தியவாணி முத்து நகர் உள்பட 9 கிராமங்களில் உள்ள மீனவர்களின் 787 மீன்பிடிப் படகுகள் சேதமடைந்துள்ளன. எனவே எண்ணெய்க் கசிவால் சேதமடைந்த 787 மீன்பிடிப் படகுகளுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 787 மீன்பிடிப் படகுகளுக்கு 78.70 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
மேலும் எண்ணெய்க் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 301 குடும்பங்களுக்குத் தலா 12 ஆயிரத்து 500 ரூபாய் என 2 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். வாழ்வாதாரம் பாதித்த மீனவர் குடும்பங்களுக்குத் தலா 7 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் 6 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு வழங்கப்படும். இதற்காக 5 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் வீடுகள், படகுகளுக்கு நிவாரணம் வழங்க 8 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.