நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.
மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.
உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.
காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.