Skip to main content

அதிமுக தோல்வி நிலையால் கூட்டுறவு தொழிற்சங்க தேர்தலை ரத்து செய்த அதிகாரிகள்!  

Published on 28/04/2018 | Edited on 28/04/2018


 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்காக இன்கோசர்வ் சொசைட்டி உள்ளது. இந்த சங்கத்தில் என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் இன்கோசர்வ் ஒப்பந்த தொழிலாளர்கள் 3994 பேர் உள்ளனர். இந்த சங்கத்திற்கான இயக்குனர்கள் தேர்தல் வெள்ளிக்கிழமை நெய்வேலி வட்டம் 9-ல் உள்ள நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேட்சைகள் என 113 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வெற்றி பெறும் 11 நபர் சங்கத்தின் இயக்குனர்களாக நியமிக்கப்படுவர்.
 

காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தலில் மதியம் 2.00 மணியளவில் சுமார் 1500 வாக்குகளே பதிவாகியிருந்தது. ஆனால் அதிலும் 5% கூட ஆளும் அ.தி.மு.கவுக்கு ஆதரவான நிலை இல்லை என தெரிய வந்தது. 
 

மாநிலம் முழுக்க ஆளுங்கட்சி என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி அ.தி.மு.கவினர் மூலம் கூட்டுறவு சங்கங்களை கைப்பற்றி வரும் அ.தி.மு.கவால்  தொழிலாளர்கள் நிறைந்த என்.எல்.சி கூட்டுறவு சங்கத்தில் 5% வாக்குகளை பெற முடியாது என்பதால் காவல் துறை மற்றும் தேர்தல் அலுவலர்கள் கூட்டு சேர்ந்து குழப்பம் விளைவித்தனர்.  
 

2.30 மணியளவில் தேர்தல் அலுவலர் உத்திரமூர்த்தி தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தார். ஆளும்கட்சிக்கு ஆதரவாகவே தேர்தலை நிறுத்த அதிகாரிகள் சதி செய்வதாக கூறி திமுக, பா.ம.க, த.வா.க, கம்யூனிஸ்ட், வி.சி உள்ளிட்ட கட்சிகளின்  தொழிற்சங்கத்தினர் வாக்குவாதத்திலும் போராட்டத்திலும்  ஈடு்பட்டனர்.

இரண்டாவது ஷிப்ட் பணி முடித்துவிட்டு வாக்களிக்க வந்த ஆயிரத்திற்கும. மேற்பட்டவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
 

மாலை 6 மணியளவில் தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் விதிகளின்படி என்.எல்.சி., இன்சோகேர்வ் தேர்தல் நிறுத்தப்படுவதாகவும். தேர்தல் ஆணையத்தின் மறு அறிவிப்பு கிடைத்தப்பின் மறு தேர்தல் தேதி அறிவிக்கப்படும்,என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 
 

இந்நிலையில் தேர்தல் அதிகாரிகளின் முறைகேடுகளை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்