Skip to main content

ரூ.112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்; இறால் பண்ணையை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் கிராமத்தில் உப்பளம் நடத்த அரசு நிலத்தை குத்தகைக்கு பெற்று அந்த நிலத்தில் பலர் சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தி வருகின்றனர். இதற்காக தவறான முகவரிகள் கொடுத்து மின்சாரம் பெற்று நடத்தி இருக்கின்றனர். இது போல உப்பளம் நடத்த அனுமதி பெற்ற ஒரு இறால் பண்ணையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்டம்ஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் லேகியம் மற்றும் 874 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றி அதே இடத்தில் இருந்த சாராய ஊறலையும் அழித்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் அள்ளிச் சென்றனர்.

இது சம்பந்தமாக 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில், இந்த கடத்தலில் மேலும் பல பெரும்புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புதன் கிழமை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

இந்த நிலையில் வியாழக்கிழமை(14.3.2024) ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங், மீன்வளத்துறை உதவி இயக்குநர் பஞ்சராஜா, சாதிக் பாட்சா, கனகராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூடி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகையை பொக்லின் இயந்திரம் மூலம் உடைத்து தரைமட்டமாக்கினர். மேலும் இறால் பண்ணை கரைகள் உடைக்கப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணை ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது பண்ணை குட்டைகளில் இறால் குஞ்சுகள் விட்டிருப்பதால் 2 மாதம் அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசி அவகாசம் பெற்றுள்ளனர். பரபரப்பான சூழ்நிலையில் கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி கௌதமன் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.

Officials razed the shrimp farm where cannabis were stashed near   Mimisal

அப்பகுதி பொது மக்கள் கூறும் போது.. கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணைக்குட்டை பற்றி உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இப்போது அந்தக் கொட்டகை அடையாளமாக இருக்கக்கூடாது என்பதற்காக இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். இது போன்ற இடங்களுக்கு ஆலங்குடியில் இருந்து ஒரு பெண் காவல் அதிகாரி அடிக்கடி வந்து செல்வார். அவருக்கு தெரியாமலா இது நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கடந்த சில மாதம் முன்பு கோட்டைப்பட்டினம் அருகே ஒரு பேக்கரி உணவு தயாரிப்பு கூடத்தில் கஞ்சா கைப்பற்றினார்கள் அந்த கூடத்தை உடைத்தார்களா என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம் தற்போது கஞ்சா கைப்பற்றிய இறால் பண்ணை குட்டையில் வேறு எங்கும் போதைப் பொருள் புதைத்து வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் தான் உடைத்து தரைமட்டமாக்கி பார்த்திருக்கிறார்கள் என்கின்றனர்.

போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகை மற்றும் சட்ட விரோத இறால் பண்ணையை அதிகாரிகள் உடைத்து தரை மட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்