கோவை வடக்கு மாவட்டத்தில் 150க்கு மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் கடந்த ஆண்டை காட்டிலும் விற்பனை கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. வருகிற மாதங்களில் அதனை ஈடுகட்டும் விதமாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு, அதிகாரிகளால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருவாய் ஈட்ட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது..
இதன் ஒரு பகுதியாக, திங்களன்று கோவை வடக்கு மாவட்டத்தில் உள்ள 150 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளின் சூப்பர்வைசர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் பங்கேற்று விற்பனை சரிவுக்கான காரணத்தை கேட்டறிந்துள்ளார். அந்தக் கூட்டத்தில் பேசிய சூப்பர்வைசர்கள், கோடை காலம் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்களின் கவனம் முழுவதும் தங்களின் பிள்ளைகளின் கல்விச் செலவை ஈட்டுவதில் அக்கறை காட்டி வருகின்றனர். ஆகவே இந்த விற்பனை சரிவு என்பது நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் போலி மது வகைகள் அதிகம் புழக்கத்தில் இருக்கிறதா என்பதை கண்டறிந்து தகவல் அளிக்க வேண்டும் எனவும் அதே நேரத்தில் வருகிற நாட்களில் இழப்பை சரிகட்ட மதுவகை விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்தி வருவாய் ஈட்ட வேண்டும் எனவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று கோவை வடக்கு மாவட்டத்தில் மதுபான விற்பனை சரிந்த 90 டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர் கூட்டம் நடைபெற்று வருகிறது இதில் விற்பனையாளர்கள் கூடுதல் கவனமும் அக்கறையும் எடுத்து வருவாய் அதிகரிக்க தீவிரமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படடதாக தெரிகிறது.