தஞ்சை மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சம்பைபட்டினம் கிராமத்தில் கடலோரத்தில் பலதலைமுறைகளாக குடியிருந்து வரும் சிறுபான்மை இன மீனவ மக்களுக்கு விதிகளை தளர்த்தி வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு மீன்வளத்துறை அமைச்சரை புதன்கிழமை அன்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, புதன்கிழமை அன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து, தொகுதி வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் மீனவக் கிராமத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தவாறு, மல்லிப்பட்டினத்தில் கட்டப்பட்டது போன்ற நவீன மீன்பிடித்துறைமுகத்தை கட்டித் தரவேண்டும். அதில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்.
மேலும் சின்னமனை, பிள்ளையார்திடல், திருவத்தேவன், சேதுபாவாசத்திரம் மற்றும் தேவையான இடங்களில், நாட்டுப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் வகையில், கடலில் ஆறு சென்று கலக்கும் வாய்க்கால்களில் உள்ள சேறு, சக்திகளை அகற்றி தூர் வாரி, ஆழப்படுத்தி தரவேண்டும்.
இதுவரை கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்கப்பெறாமல் உள்ள 7 படகுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். சம்பைபட்டினம் கிராமத்தில் பல தலைமுறைகளாக கடலோரத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் குடும்பங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், விதிமுறைகளை தளர்த்தி, கருணை அடிப்படையில் வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார். கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்தார்.