Skip to main content

வீட்டு உபயோக மின் கட்டண கணக்கீட்டில் விதிமீறல் இல்லை! -அரசின் விளக்கத்தை பதில் மனுவாக அளிக்க உத்தரவு!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020
HIGHCOURT

 

ஊரடங்கு காலத்தில் வீட்டு உபயோக இணைப்புக்கான மின் கட்டண கணக்கீட்டில் எந்த விதிமீறலும் இல்லை என்ற தமிழக அரசின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரடங்கினால், நான்கு மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை சேர்த்து பில் போடுவதால் 14 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும். ஊரடங்கு காலத்தில் வீட்டு உபயோக இணைப்புக்கான மின் அளவு கணக்கீடு குறித்த மின்வாரியம்  பிறப்பித்த  உத்தரவை ரத்து செய்து, இரண்டு மாதங்களுக்கு  தனித்தனியாக பில்கள் தயாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது

அரசுத் தரப்பில், மின் கட்டண கணக்கீட்டில் எந்த விதிமீறலும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 23-ம் தேதி,  தமிழக அரசு மின்சார வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்