Skip to main content

சீல் வைத்த பாதுகாப்பு அறையை திறந்த அதிகாரிகள்.. சந்தேகத்தை தெளிவுபடுத்திய ஆட்சியர்..! 

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

Officers open sealed security room .. Collector clarifies candidates' suspicions ..!

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், கந்தர்வகோட்டை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் 1,902 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. 

 

இந்த மையத்திற்கு நேற்று இரவு 9 மணி முதல் வாக்குப்பதிவான இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 140 ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு, சிசிடிவி, உள்ளிட்டவற்றுடன் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், இன்று காலை வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட தேர்தல் பார்வையாளர் ரகு ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர்கள், முகவர்கள் பார்வையில் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

 

சீல் வைத்து முடித்த சிறிது நேரத்தில், விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன் மற்றும் முகவர்கள் வெளியேவந்தனர். அப்போது, விராலிமலைத் தொகுதி மாத்தூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி 27ல், வாக்குச்சாவடி அதிகாரி மற்றும் முகவர்கள் கையெழுத்திட்ட பிறகு, சீல் வைக்கப்பட்ட 'பிங்க்' கலர் நாடா, சீல் அகற்றப்பட்டு வெளியே கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பு மையத்தில் இருந்து வெளியேறாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விராலிமலை தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டது அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

‘அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதி என்பதால் வாக்குப் பெட்டிகளை மாற்றி இருப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது. அதனால் சீல் வைக்கப்பட்ட அறையைத் திறந்து பெட்டிகளைப் பார்த்த பிறகே இங்கிருந்து செல்வோம்’ என்றார் விராலிமலை வேட்பாளர் பழனியப்பன். தொடர்ந்து திமுக மா.செ செல்லப்பாண்டியன் (பொ) அங்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால் விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணியை மாற்ற வேண்டும் என்று புகார் மனு கொடுத்தார்.

 

Officers open sealed security room .. Collector clarifies candidates' suspicions ..!

 

மாவட்ட ஆட்சியர் உமாமகேஷ்வரி, சம்மந்தப்பட்டவர்களிடம் விளக்கிப் பேசியபோது, “ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி முகவர்கள் முன்னிலையில் அந்த சீட்டுகளை ஒரு கருப்பு கவரில் வைத்து தனிப் பெட்டிக்குள் வைப்பது நடைமுறை. பிறகு, அந்தப் பெட்டிக்கு சீல் வைக்க முகவர்கள் கையெழுத்திட்ட பிங்க் நிற நாடா பயன்படுத்தப்படுகிறது. அப்படி வைக்கப்பட்ட சீல் அகன்று இந்த நாடா விழுந்திருக்கிறது. மற்றபடி அனைத்து வாக்குப் பெட்டிகளும் பாதுகாப்பாக உள்ளது” என்று கூறினார். 

 

ஆனால், சீல் வைக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தை திறந்து பார்க்க வேண்டும் என்று திமுக, அமமுக, மநீம வேட்பாளர்கள் வலுவாகக் கோரிக்கை வைத்தனர். அதன் பிறகு, தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சீலிடப்பட்ட பாதுகாப்பு மையத்தைத் திறந்து பார்த்த போது, மாவட்ட ஆட்சியர் கூறியது போல மாதிரி வாக்கு சீட்டுகள் வைக்கப்பட்ட பெட்டியில் மட்டும் சீல் இல்லை. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், “வாக்கு எண்ணும் நாளில் அனைத்துப் பெட்டிகளும் நீங்கள் பார்த்த பிறகே திறக்கப்பட்டு எண்ணப்படும்” என்று கூறினார். இருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பார்க்க வேண்டும் என்று வேட்பாளர்களும் முகவர்களும் காத்திருக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்