தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இன்று (04.08.2024) பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு பணிகளில் உள்ள அதிகாரிகளை பல மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக தமிழக அரசு நியமித்துள்ளது. அந்த வரிசையில் மிக முக்கியமான பகுதியான தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் ஏற்கனவே ஐ.ஜியாக தலைமையிடமான கோவையில் இருந்த பவானீஸ்வரி மாற்றப்பட்டு புதிய ஐ.ஜியாக த.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்,
இவர் ஏற்கனவே காவல்துறை தலைவர் அலுவலகத்தில் (டிஜிபி பொது) ஐ.ஜியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் இன்று மேற்கு மண்டல ஐ.ஜியாக நியமிக்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது. ஐ.ஜி செந்தில்குமாரின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சிவகிரி. இதே மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர். காவல்துறையில் எந்த விதமான புகாருக்கும் இடமில்லாமல் பணியாற்றியவர். நேர்மையானவர் என்று பெயர் பெற்றுள்ள ஐ.ஜி செந்தில் குமார் மேற்கு மண்டலத்தில் பொறுப்பேற்பது காவல்துறையினர் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.