மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பேரிடர் ஏற்பட்டது. இந்நிலையில் நிவாரணப் பணிகளுக்காக மத்தியக் குழு தமிழகம் வந்துள்ளது. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் இக்குழு வருகை தந்துள்ளது. இரண்டு குழுக்களாகப் பிரிந்து வட மற்றும் தென் சென்னை பகுதிகளில் ஆய்வு செய்ய திட்டமிட்டனர். இக்குழுவினர் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். மத்திய ஆய்வுக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து முதல் குழு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அறிவித்து வருகிறது. தொடர்ந்து, புயல் மழையால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் டிசம்பரில் கணக்கீடு செய்யப்படாதவர்களிடம் அக்டோபர் மாதம் பெறப்பட்ட மின் கட்டணத்தையே வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புயல் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளிட்ட பல இடங்களில் நீர் தேங்கியதால் டிசம்பர் மாத மின் கணக்கீடு பல இடங்களில் செய்யப்படவில்லை. அப்படி மின் கணக்கீடு செய்யப்படாதவர்கள் அக்டோபர் மாத மின் கட்டணமே செலுத்தலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழை பாதிப்பால் பல்வேறு வீடுகளில் நீர் தேங்கி மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.