தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற இருளப்பட்டி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தருமபுரி, சேலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்களது நேர்த்திக் கடனுக்காக இந்த ஆலயத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
புகழ்பெற்ற இருளப்பட்டி காளியம்மன் கோவில் இந்தப் பகுதியில் அரூர் - சேலம் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது, இதனால் எப்பொழுதும் இந்த ஆலயத்திற்குப் பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணமே இருக்கும். பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. அனைத்து சமூக மக்களும் ஆலயத்திற்குள் வந்து செல்லும் வகையில் இந்த ஆலயம் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வருடாந்திர தேர் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. இந்த ஆலயத்திற்கு வேண்டுதல் செலுத்துபவர்களும் வேண்டிக் கொள்பவர்களும் இந்த தேர்த் திருவிழாவிற்கு பெருமளவில் கூடுவார்கள்.
அந்த வகையில் இந்த வருடம் தேர் திருவிழாவை சிறப்பாக நடத்த கடந்த ஒரு வார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பக்தர்கள் அனைத்து சமூக மக்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாகப் பழங்குடியின சமூகத்தை சார்ந்த குறவர் சமூகத்தினர் இந்தப் பகுதியில் அதிகளவில் வாழ்ந்து வருவதால் அவர்களின் காவல் தெய்வமாக இந்த ஆலயம் விளங்கி வருவதால் இந்த ஆலயத்திற்குப் பெருமளவு பழங்குடியின சமூகத்தைச் சார்ந்த மக்கள் பெரும் திரளாகக் கூடுகின்றனர்.
அப்படிக் கூடுகின்ற இந்த திருவிழாவில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் ஊத்தங்கரை பகுதியைச் சார்ந்த வங்கி ஊழியராக வேலை செய்யும் தம்பதியினர் பழங்குடியின குறவர் சமூகத்தைச் சார்ந்த சுகன விலாசம் (30) இவரது மனைவி அனிதா (27) ஆகிய இருவரும் திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த ஆலயத்தில் குழந்தை வரம் கேட்டு வேண்டியுள்ளனர். அதன்படி இவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. அதற்குப் பரிகாரமாக நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காக இருளப்பட்டி தேர் திருவிழாவில் 2500 பக்தர்களுக்கு உணவு சமைத்து அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இந்த நிலையில் சில மாற்று சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆலய பகுதியில் நீங்கள் அன்னதானம் வழங்கக் கூடாது வேறு எங்காவது எடுத்துச் செல்லுங்கள் என காவல்துறை உதவியுடன் இந்த தம்பதியினரை மிரட்டியுள்ளனர். இந்த தம்பதியினர் காவல்துறையிடம் கூறியும் காவல்துறை கேட்காமல் இவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்துள்ளது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வங்கி ஊழியரான அனிதா தெரிவிக்கையில், “நான் இந்த இருளப்பட்டி பகுதியைச் சார்ந்தவர். திருமணமாகி எனது கணவருடன் ஊத்தங்கரையில் வசித்து வருகிறேன். எங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை ஆதலால் இந்த ஆலயத்தில் வேண்டிக்கொண்டோம் பிறகு எங்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்தது. அதற்குப் பரிகாரமாக இந்த ஆலய திருவிழாவின்போது 2,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதாக வேண்டிக் கொண்டேன். அதன்படி ஆலயத்தில் அதற்காக எட்டு மூட்டை அரிசி, பருப்பு, பொருட்களுடன் உணவு சமைத்துக் பக்தர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தோம். அப்போது மாற்று சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலர் பழங்குடியின பெண்ணான நீங்கள் அன்னதானம் வழங்கக்கூடாது எனக் கூறி காவல்துறை உதவியுடன் எங்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிகள் மேற்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் தயவுசெய்து சாதி பார்க்காதீர்கள்; நான் வேண்டுதல் நிறைவேற்ற ஒத்துழையுங்கள் எனக் கெஞ்சி மன்றாடினேன். இருந்தபோதிலும் அவர்கள் எங்களை விரட்டினர்.
இந்த நிலையில் அங்கு வந்த காவல் துறையினரிடம் நாங்கள் சாதி பாகுபாடு இன்றி தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகின்றோம். ஆதலால் எங்களைச் செய்ய விடுங்கள் என்று கேட்டுக் கொண்டும். ஆனால் காவல்துறை எங்களை இங்கிருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தனர். நாங்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும் காவல்துறை எங்களை ஆலய பகுதியில் இருந்து வெளியேற்றி விட்டனர். மேலும் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அரசின் அனுமதி பெற்று அன்னதானம் இடுவதற்கும் அனுமதிக்காமல் எங்களது சமையல் செய்யும் சிலிண்டர் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தி மிரட்டினர்.
திராவிட மாடல் ஆட்சியில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதனால் பெரும் மன உளைச்சலை எங்களுக்கு ஏற்படுத்தியது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எங்கேயும் நடக்கக்கூடாது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.