திருவாரூரில் தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தினர் சார்பில் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதான சத்துணவு ஊழியர்களுக்கு உணவு அளிக்காததால் கூடுர் கடைவீதியில் திடிர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இன்று வழக்கம் போல் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள்
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கூடுரில் உள்ள திருமணமண்டபம் ஒன்றில் அடைக்கப்பட்டனர் .
இந்நிலையில் கைதான சத்துணவு ஊழியர்களுக்கு மூன்று மணி வரையும் உணவு அளிக்காததால், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உணவு வழங்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.