திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் - கலா மேரி தம்பதிகளின் இரண்டாவது மகன் சுர்ஜித் வில்சன் (2).
நேற்று முன்தினம் மாலை 5.40 மணிக்கு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது சுர்ஜித்தின் பெரியப்பா வேளாங்கண்ணியின் தோட்டத்தில் இருந்த பழைய ஆழ்குழாய் கிணற்றுக்குள் சுர்ஜித் தவறி விழுந்தான்.உள்ளூர் நபர்கள் மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள். பின்னர் தீயணைப்பு வீரர்கள், போலீசார் என பலரும் மீப்பு முயற்சிகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து மதுரை மணிகண்டன் உள்ளிட்ட பல தனியார் குழுவினர் களமிறங்கி மீட்க முயன்றனர். அப்போது வரை 26 அடி ஆழத்தில் பேச்சுக்கு பதில் சைகை காட்டிக் கொண்டிருந்தது குழந்தை. தனியார் மீட்புக்குழுவின் முயற்சிகள் பயனலிக்காமல் போக பொக்லைன் இயந்திரங்கள் அருகில் குழி வெட்ட சுர்ஜித் 26 அடியில் இருந்து 70 அடிக்கு கீழே சென்றான். மேலே மண் கொட்டியது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் வீரமணி குழுவினர் களமிறங்கினார்கள். மண் சரிந்திருந்ததால் அவர்களின் சிறிய ரக கருவி கீழே செல்லவில்லை. அடுத்து மத்திய மாநில மீட்புக்குழுவினரும் வந்து நவீன கருவிகள் இல்லை என்று முதலில் செய்த முயற்சிகளையே இவர்களும் செய்து தோற்றனர். ஐஐடி, அண்ணா பல்கலைக் கழகம் என்று முயன்றனர் முடியவில்லை. இறுதியாக ஒஎன்ஜிசி, என் எல்சி நிறுவனங்கள் ஆழ்குழாய் அமைக்கும் பணியை 40 மணி நேரத்திற்கு பிறகு தொடங்கி செய்து வருகின்றன. இந்த நிலையில் தான் ஒட்டு மொத்த தமிழகமும் சுஜித் மீண்டு வா என்று சமூக வலைதளங்களில் வேண்டிக் கொண்டனர். கோயில்கள், பள்ளிவாசல்கள், சர்ச்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. தீபாவளி எங்களுக்கு இல்லை, நீ வந்தால் தீபாவளி என்று பல ஆயிரக்கணக்கானோர் பதிவுகளை போட்டனர்.
இந்த நிலையில் தான் குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்டெடுக்க அமெரிக்காவில்உள்ள டெக்ஸாஸ் மாநிலம் ஹூஸ்டன் மாநகரில் உள்ள மீனாட்சி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் கோவில் நிறுவனர் கண்ணப்பன் சொக்கலிங்கம் அவர்கள் அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பாக இந்த சிறப்பு பூசை ஏற்பாடு செய்து இருந்தார். ஹூஸ்டன் வாழ் தமிழர்கள் சார்பாக வாசகர் பெருமாள், அண்ணாமலை உள்பட பலரும் கலந்து கொண்டு சுர்ஜித் மீண்டு வர வேண்டி பிரார்த்தனை செய்தனர்.