இன்று (21.10.2021) சென்னை தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் சார்பில் துவக்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பேராசிரியர் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள உதவி பேராசிரியர்கள் 9 பேர், நூலகர் ஒருவர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் பா.ஜான்சிரானி கூறியதாவது, “அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எங்களை போன்ற தமிழ் படித்தவர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் எங்களுக்கு இந்த பணி வாய்ப்பினை தந்த முதல்வருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிகொள்கின்றோம். எங்களை போன்ற தமிழ் படித்தவர்களுக்கு இப்போது தான் விடிவு காலம் பிறந்திருக்கிறது. ஏனென்றால் 25 லட்சம் தொடங்கி 45 லட்சம் வரை பேராசிரியர் பணிகளுக்கு பேரம் பேசப்படுகிறது. ஆனால் எந்த ஒரு செலவை செய்யாமல் நேரடி பணி நியமனத்தை கொடுத்திருக்கிறார்கள், அதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த கல்லூரியில் நாங்கள் அனைவரும் பணியில் சேர்ந்து மிக சிறப்பான முறையில் இந்த கல்லூரியை கொண்டு செல்வோம் என கூறிகொள்கின்றேன்” என கூறினார்.