தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் விஜய், தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் நேரடி அரசியலுக்கு வருவதற்காக மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்று மாற்றி புதிய கட்சியை தொடங்கினார். கட்சி சார்பாக மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை செய்து வரும் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் தான் நமது இலக்கு என்று அதற்காக கட்சி நிர்வாகிகளை மக்கள் பணி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் மக்களுக்கு நலதிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கினார். அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய் விரைவில் மாணவர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்தாண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கவுள்ளார். இது தொடர்பான அறிக்கையை வெளியிட்ட த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த, த.வெ.க தலைவர் விஜய் 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பாராட்டவுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல் , நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வரும் 28 ஆம் தேதி சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கும் என்றும், இரண்டாவது கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவண்ணாமலை,ட் திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு ஜூன் 3 ஆம் தேதி அதே ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை மாணவர்கள் சந்திப்பில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகிய தலைவரைப் பற்றி படியுங்கள் என்று விஜய் அறிவுரை கூறியிருந்தார். தற்போது விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கும் நேரத்தில் த.வெ.க தலைவராக மாணவர்கள் மத்தியில் உரையாற்றப் போகும் விஜய் எந்தமாதிரி பேச போகிறார் என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .