
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைக் குடோனில் பதுக்கிவைத்திருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து காவல்துறையினர், சோமனூர் ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள குடோனில் சோதனை செய்தனர். அப்போது அந்தக் குடோனில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் மூட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அந்த மூட்டையில் வைத்திருந்த 390 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், விற்பனைக்காக குட்கா பொருளைப் பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹீரா ராம் (40) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தடை செய்யப்பட்ட போதை பொருட்களைச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய குடோனில் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.