சிதம்பரத்தில் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் அப்துல் ரியாஸ் தலைமை தாங்கினார். இதில் பொதுச் செயலாளர் கம்பன் அம்பிகாபதி, பொருளாளர் அருணாச்சலம், துணைத் தலைவர் சிவராம வீரப்பன், நிர்வாகச் செயலாளர் கண்ணன், கூடுதல் செயலாளர் புகழேந்தி, சட்ட ஆலோசகர் ஸ்ரீதர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ் ஒளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில், சாரதா சேது விரைவு ரயில், தாம்பரம் - செங்கோட்டை, காரைக்கால் - எழும்பூர் விரைவு ஆகிய ரயில்களைச் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கோவை - மயிலாடுதுறை மற்றும் மைசூர் - மயிலாடுதுறை ரயில்களைச் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும் ரயில்வே துறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. எனவே வரும் 20-ம் தேதிக்கு மேல் விரைவில் சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தலைமையில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் மிகப்பெரிய ரயில் மறியல் போராட்டம் நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.