சென்னையில் மாநகரப் பேருந்துகளுக்கு இணையாக மின்சார ரயில்களை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுவதால் ஏழை, எளிய மக்களுக்கு பெரும்உதவியாக இருக்கும் இந்த ரயில்சேவையில், ஏற்கனவே வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் மின்சார ரயில்களுக்காக புதிதாக விடப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முன்னதாக விடப்பட்டிருந்த ரயில்பெட்டிகளில் தமிழ், ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. வட்டார மொழியான தமிழ்மொழி எந்த இடத்திலும் இடம்பெறவில்லை.
இதுதொடர்பாக சென்னை மின்சார ரயிலில் பயணித்த ஆவடியை சேர்ந்த வினோத் என்ற இளைஞர் நம்மிடம் கூறுகையில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை மின்சார ரயிலில் பயணிக்கிறேன். தமிழ்மொழி நசுக்கப்படுவதாக செய்திகளில் பார்த்த எனக்கு, நேரிலேயே அதைப் பார்த்துவிட்டேன். திருவள்ளூரில் இருந்து சென்னை செண்ட்ரல் ரயில்நிலையம் நோக்கி சென்ற ரயிலில் இணைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பெட்டிகளில் தமிழ் அறிவிப்புகளை எந்த இடத்திலும் பார்க்க முடியவில்லை. ரயில் செண்ட்ரல் ரயில்நிலையத்தை அடைந்தபின்னர் மற்ற பெட்டிகளிலும் சோதித்துப் பார்த்தேன். ஆனால், தமிழ்மொழி அங்கே இல்லை. அதேசமயம், பழைய ரயில் பெட்டிகளில் தமிழில் அறிவிப்புகள் இருந்தன.
இந்த ரயில்களில் வழக்கமாக பயணிப்பவர்கள் கூட, இதனைத் தட்டிக்கேட்காமல் பயணிப்பது வேதனை அளிக்கிறது. நான் வெளிநாட்டில் படிப்பை முடித்து சமீபத்தில்தான் இந்தியா வந்தேன். மற்ற நாடுகளில் தாய்மொழியின் மீது அந்த மக்கள் கொண்டிருக்கும் பற்று, உலகின் மூத்தமொழியான நம் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இல்லாதது வருத்தமளிக்கிறது. தமிழ் மொழியை இல்லாது செய்யும் இந்த வேலைகள் கைவிடப்படவேண்டும்” என்றார் வேதனையான குரலில்.
சமீபகாலமாக தமிழகம் முழுவதும் எந்த வழியிலாவது இந்தியைத் திணித்துவிட முயற்சித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் ஆளும் அ.தி.மு.க. அரசு, பெரிதாக எதையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்ட தமிழக அரசுப் பேருந்துகளில், தமிழுக்கு பதிலாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையானதே அதற்கு சான்று. இதுதொடர்பான விவாதங்கள் கிளம்பிய பிறகு உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தாலும், தவறு நடப்பதற்கான வழி எங்கே திறந்துவிடப்பட்டது என்ற கேள்வியை தமிழ் ஆர்வலர்கள் எழுப்பாமல் இல்லை.
தமிழக அரசு இதுபோன்ற விஷயங்களில் துரிதமாக செயல்பட்டு, தவறுகளைக் களையவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது.