திண்டுக்கல்லில் பஸ்நிலையத்தில் பயணி ஒருவரை டிரைவர்கள் முதல் கண்டக்டர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பஸ்நிலையத்திலிருந்து தேனி வழியாக குமுளிக்கு செல்ல ஒரு அரசு பஸ் நின்று கொண்டிருந்தது. அந்த பஸ் புறப்பட கூடுதல் கால அவகாசம் இருந்ததால் பயணிகள் யாரும் அந்த பஸ்சில் ஏறவில்லை, இந்தநிலையில் அந்த பஸ்சில் பயணி ஒருவர் ஏறி பின்புற இருக்கையில் அமர்ந்தார். அப்போது கண்டக்டர் பஸ் புறப்பட இன்னும் நேரம் இருக்கிறது எனவே வேறு பஸ்ஸில் செல்லுங்கள் என்று அந்தப் பயணியிடம் கூறியிருக்கிறார். அப்போது கண்டக்டர் உடன் அந்த பயணி வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதை பார்த்த சில டிரைவர்கள், கண்டக்டர்கள் அங்கு வந்து அந்த பணியை பஸ்சை விட்டு கீழே இறக்கினார்கள். பின்னர் அவரை வேறு பஸ்ஸில் செல்லும்படி கூறினார்கள். அதனை ஏற்காத பயணி டிரைவரிடம் தகராறு செய்தார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஒரு டிரைவர் அந்த பயணியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதையடுத்து அந்த பயணியும் பதிலுக்கு டிரைவரை தாக்கினார். அதுகண்டு அருகே இருந்த மற்ற டிரைவர், கண்டக்டர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சரமாரியாக அந்த பயணியை தாக்கினார்கள்.
இப்படி பட்டப்பகலில் பயணிகள் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு பயணியை போட்டு டிரைவர், கண்டக்டர்கள் சரமாரியாக தாக்கியது கண்டு அருகே இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். இச்சம்பவம் போலீஸார் காதுக்கு எட்டவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் அந்த பயணியை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்களால் தாக்கப்பட்ட பயணி தேனியை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. அவருக்கும் டிரைவர், கண்டக்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது ஏன் என போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இப்படி பட்டப்பகலில் நடந்த அடிதடி சம்பவம் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் பரவி வருகிறது.