தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், 'சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தான் 'எந்த காலத்திலடா பேசினால் பராசக்தி' என வசனம் வைத்தார். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்றார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையில், ''சனாதனத்தை எதிர்த்து அழித்து ஒழித்து விட முடியாது. சொல்ல சொல்ல இந்த கொள்கை இன்னும் வளரும். இன்னும் சொல்லப் போனால் குறிப்பிட்ட சதவீத மக்கள் இதைப் பின்பற்றுகிறார்கள். அவர்களை புண்படுத்த வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் சில பேரை புண்படுத்தக் கூடாது என்று பல பேரை புண்படுத்திக் கொண்டு இருந்தால் எப்படி. அதுவும் ரொம்ப தவறு. இன்று அறநிலையத்துறையை வைத்துள்ளீர்கள். முதலில் போய் உங்க அப்பாவிடம் சொல்லி சனாதன தர்மத்தை முற்றிலுமாக எதிர்க்கிறேன். நான் ஒரு மந்திரி அதனால் இந்த இந்து அறநிலையத்துறையே வேண்டாம் என்று சொல்லி விடுங்கள். கோவில் வேண்டாம்; சாமி வேண்டாம்; ஆனால் உண்டியல் மட்டும் எனக்கு வேணும் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். முதல்வர் எல்லா மதத்திற்கும் நாங்கள் ஒன்றானவர்கள் என்று சொல்கிறார். நான் இந்துவாக கேட்கிறேன் ஏன் எனக்கு தீபாவளி வாழ்த்து சொல்லமாட்டேன் என்கிறீர்கள்; கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து சொல்லமாட்டேன் என்கிறீர்கள். எல்லாம் ஒன்றுதான் என்றால் சொல்ல வேண்டியது தானே. பாகுபாட்டை நீங்கள் பார்க்கிறீர்கள். இதை நீங்கள் இன்று பதற்றத்தோடு வெளிப்படுத்துகிறீர்கள்'' என்றார்.