சென்னை பெரம்பூர் தொன்போஸ்கோ பள்ளியில் திமுகவின் சிறுபான்மை நல உரிமை பிரிவின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “எந்த மதமும் வேறுபாட்டை போதிப்பதில்லை. மனிதர்கள் அனைவரும் சமம்தான் என்பது சமத்துவம். எனவேதான் கிறிஸ்துமஸ் விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடத்துகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உண்மையான அக்கறையுடன் உதவி வழங்கினோம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழையால் பாதிக்கப்பட்டோரில் 98% பேருக்கு ரூ. 6 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரணத்திற்காக விண்ணப்பம் செய்தவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து விரைவில் நிறைவேற்றப்படும்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி கபட நாடகம் ஆடுகிறார். அதிமுகவின் கபட நாடகத்தைப் பார்த்து மக்கள் யாரும் ஏமாறமாட்டார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல், மழை வெள்ள பாதிப்பில் எடப்பாடி பழனிசாமி மலிவான அரசியல் செய்கிறார். வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்தார்.