அண்மையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 7 லட்சத்தை இழந்த ஆயுதப்படைக் காவலர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, காவல் ஆளினர்கள் ‘ஆன்லைன் ரம்மி’ போன்ற சூதாட்டம் ஆட வேண்டாம் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
தருமபுரியைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் வேலுச்சாமி (24). கடந்த 4ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் கீழ் தாடையை துப்பாக்கி தோட்டா துளைத்ததில் படுகாயம் அடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதற்கட்டமாக முக தாடை அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது. துப்பாக்கி தோட்டா தாடையை மட்டுமே பெயர்த்துச் சென்றதால், உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரிடம் உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டில் ரூ. 7 லட்சம் வரை இழந்ததும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்திருக்கிறது. இதனிடையே, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில், காவல் ஆளினர்கள் பணி நேரத்தின்போது, ஓய்வில் இருக்கும்போது ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டம் ஆட வேண்டாம் என கேட்டுக்கொண்டிருக்கிறார். இது உங்களை மட்டுமல்லாது, குடும்பத்தினரையும் பாதிப்பதோடு, காவல்துறையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும். எனவே, இவ்வித சூதாட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டாம்” என கேட்டுக்கொண்டிருக்கிறார். மது, மாது மட்டுமல்ல ‘சூது’ என்பதும் உயிரைக் கொல்லும் என்பதை உணர்ந்தால் சரி.!