இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி அன்று நடைபெறும். இதற்கிடையில் ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் நாளை தமிழகம் வர இருக்கும் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபட உள்ளார். அதேநேரம் நடிகர் ரஜினிகாந்த் இன்று இயமலை கிளம்பியுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்தை சூழ்ந்த செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
'மீண்டும் மோடி ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா?' என்ற கேள்விக்கு, ''சாரி பொலிடிகல் கேள்வி கேட்காதீர்கள்' என்றார். இசையா? கவிதையா? என்ற போட்டி தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது என்ற கேள்விக்கு, 'அண்ணா... நோ கமெண்ட்ஸ்' என கையெடுத்து கும்பிட்டார். 'ஆன்மீகம் என்பது சாந்தி சமாதானம் அது உலகத்துக்கே தேவை. கேதர்நாத், பத்ரிநாத், பாபா கேவ்க்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன்' என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.