விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள செம்பாகுறிச்சி வனப்பகுதியில் ஜூலை 16 ந் தேதி இரவு 8.30 மணி அளவில்மாருதி ஷிப்ட் கார் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அப்போது வனக்காப்பாளர் மாரியப்பன் என்பவர் கடலூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கார் அதன் இடது பக்க டயர் எரிந்து கொண்டிருந்ததை கண்டார். அதேவேளையில் அருகிலுள்ள கீழ்குப்பம் போலீசாருக்கும் காரின் டயர் எரிவதை வழியில் சென்றவர்கள் சொல்லி விட்டு சென்றுள்ளனர்.
போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். காரின் டயரை அணைத்து காரை பரிசோதித்த போது, காரின் பின்பக்க டிக்கியில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது. அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்தது. ஏராளமான வெட்டுக்காயங்களுடன் தலையில் போர்வை சுத்தப்பட்டு ரத்தம் வெளியேறிய நிலையில் அந்த ஆண் சடலம் இருந்தது.
போலீசார் சடலத்தை மீட்டு பரிசோதித்தபோது அவர் நெய்வேலி என்எல்சி இரண்டில் பணிபுரியும் ஊழியர் என்பதும் தெரிந்தது. ஐடி கார்டு வைத்திருந்துள்ளார். அவர் பெயர் பழனிவேல் வயது 50 என்றும் அவர் நெய்வேலி என்எல்சியில் இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில் ஆபரேட்டராக பணிபுரிவதும் தெரியவந்துள்ளது. இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் 2 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளதாக தெரிகிறது.
பழனிவேலை யாரோ கொலை செய்து அவருடைய காரிலேயே கொண்டு வந்து இங்குசெம்பாகுறிச்சி வனபகுதியில் எரிக்க முயன்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி கோட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராமநாதன், மற்றும் சின்னசேலம் காவல் ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் பழனிவேலின் சடலத்தை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பழனிவேல் கொலையில் அவரது குடும்பத்தினரே கொலை செய்தது அம்பலமானது. அதனால் அவரது மனைவி மஞ்சுளா ஜூலை 17 ந் தேதி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கொலை செய்ய கூலிப்படையாக வந்த மணிகண்டன், வெற்றிவேல் ஆகிய இருவரும் கடந்த ஜூலை மாதம் 25 ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான பழனிவேல் மைத்துனர் ராமலிங்கம் என்பவரை கைது செய்ய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி டி. எஸ். பி இராமநாதன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்த நிலையில் ஆதிராமலிங்கம் நெய்வேலிக்கு காரில் செல்லும்போது வி கூட்ரோடு என்ற இடத்தில் சின்னசேலம் காவல் சரக ஆய்வாளர் சுதாகர் தலைமையில் போலீசார்கள் பாஸ்கர் தனசேகரன் விஜய் ஆகியோர் சுற்றி வளைத்து கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.