சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளரும் காட்டுமன்னார்கோயில் தொகுதி எம்எல்ஏவுமான சிந்தனைச்செல்வன் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 4 முதல் 6 சதவீதம் வரதான் பிரதிநிதித்துவம் உள்ளது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அளவில் சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு முனைப்பு காட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட இடங்களில் தகுதியானவர்கள் இல்லை என அவர்களின் இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படுகிறது என்ற தகவல் மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக நீதிக் கொள்கையை நடைமுறைப்படுத்த விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட வேண்டும்.
விவசாயிகளிடம் நிலங்களைக் கையகப்படுத்தும் என்.எல்.சி நிர்வாகத்தில் பங்குதாரர்களாக விவசாயிகளை இணைக்க வேண்டும். மேலும் விவசாயிகள் தரப்பில் ஒரு இயக்குனரை நியமிக்க வேண்டும். அதேபோல் தமிழக அரசு சார்பிலும் ஒரு இயக்குனரை நியமிக்க வேண்டும். ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து தர வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு. என்.எல்.சி இந்தியா என்பதை என்.எல்.சி தமிழ்நாடு என மாற்றக் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
விளிம்புநிலை மக்கள் மற்றும் ஆதிதிராவிட மக்களின் துணைத் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் ஒரு சிறு பேச்சைக் கூடப் பேசவில்லை. தற்போது ஆதிதிராவிட மக்களின் துணை திட்ட நிதியைப் பெண்கள் உரிமை திட்டத்திற்கு மாற்றியுள்ளதாகக் கூறுகிறார். இது போன்ற சர்ச்சை பேச்சுகளைத் தடுக்க, ஆதிதிராவிட துணை திட்டத்தைச் செயல்படுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும் எனப் பல ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது. அதனைத் தமிழக முதல்வர் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். விரைவில் அது நடைபெறும் அதன் பிறகு இதுபோல் ஆதாரமற்ற பேச்சுகளைப் பேச முடியாது.
அண்ணாமலை பாதயாத்திரை வெறுப்பு, விஷ அரசியலை விதைக்கவே அவர் யாத்திரை செல்கிறார். தமிழக மக்களிடம் அது எடுபடாது. மணிப்பூரில் மே மாதம் ஏற்பட்ட கலவரத்தில் தீ வைப்பு, வன்முறை சம்பவத்தில் பல நூறு உயிர்கள் பலியாகின, ஆயிரம் பேர் மத்தியில் பாலியல் வன்கொடுமைகள், கூட்டு பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளது. இவைகளை பாஜக அரசுகள் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தமிழக மக்கள் மட்டுமல்ல உலகத்தில் அனைத்து மக்களின் ஆன்மாக்கள் மன்னிக்காது'' என்றார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் பால. அறவாழி, மாநில நிர்வாகி நீதி வளவன், சட்டமன்ற தொகுதி செயலாளர் யாழ்திலின், இஸ்லாமிய ஜனநாயக பேரவை லியாகத் அலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு, புதிய மாவட்ட செயலாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.