பிரதமரின் ரோஸ்கார் மேளா திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம், அதுவரை 50 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 11 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்களைச் சந்தித்து முறையிடுவதற்காக நேற்று விருத்தாச்சலம் வந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலையோரம் மனிதச் சங்கிலியாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பாலக்கரையில் இருந்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சேகர், தலைவர் அந்தோணி ஆகியோர் தலைமையில் வீட்டுக்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கேயே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 120 தொழிலாளர்களை விருத்தாச்சலத்தில் உள்ள மக்கள் மன்றத்தில் அடைத்து வைத்தனர். கைது செய்து அடைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, காவல்துறையினர் உணவு கொண்டு வந்த போது, தங்களுக்கு உணவு வேண்டாம் எனவும், தமிழக அரசு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபடாததால் உணவு மறுத்து பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அமைச்சர் சி.வெ. கணேசன், தொலைபேசி வாயிலாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து, பேச்சு வார்த்தைக்கு தேதி வாங்கித் தருவதாக கூறியதால், பட்டினி போராட்டத்தை கைவிட்டு அனைத்து தொழிலாளர்களும் உணவு அருந்தினர். இதனால் சுமார் 4 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.