'நிவர்' புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில், வாழை மரங்கள் சாய்ந்ததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்குச் சென்று, புயல் சேதங்களைப் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புயல் சேதங்களைக் கணக்கீடு செய்து, இழப்பீடுகளை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையைப் பெற்றுத் தரவும் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'நிவர்' புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தமிழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வரிடம் தெரிவித்திருந்தார். திங்கட்கிழமை (30/11/2020) அன்று தமிழகம் வரும் மத்திய குழு, டிசம்பர் 1- ஆம் தேதி, 'நிவர்' புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் புயல் சேதத்தை மத்திய குழு ஆய்வு செய்ய இருக்கிறது.
தமிழகத்தில் 'நிவர்' புயல் பாதிப்புகளை மத்திய உள்துறை இணைச் செயலர், அசுதோஷ் தலைமையிலான குழு ஆய்வு செய்கிறது. வேளாண்மை, நிதி, மீன்வளத்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் பிரதிநிதிகளும் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.