'நிவர்' புயல் நிலவரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள 'நிவர்' அதி தீவிரப் புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும். 6 கி.மீ. வேகத்தில் நகரும் 'நிவர்' புயல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே இன்றிரவு கரையைக் கடக்கும். 'நிவர்' புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும். புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 145 கி.மீ. வேகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடலூருக்கு 300 கி.மீ., புதுச்சேரிக்கு 310 கி.மீ., சென்னைக்கு 370 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. புயலால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகரிக்கும். சென்னையில் அதிகபட்சமாக இதுவரை நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவானது" என்றார்.