பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்று சொல்லும் ஒரு மிக பெரிய கூட்டத்திடம் சிக்கி கொண்டோம் என்று ஆளும் அதிமுகவை கடுமையாக சாடியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் சீமான்.
புதிய பார்வை ஆசிரியரும், வி.கே.சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் நேற்று அதிகாலை சென்னையில் காலமானார். சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டது. தஞ்சை மாவட்டம் விளாரில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
"நடராஜன் தமிழ் சமூகத்தின் பெரிய ஆளுமை கொண்டவர், தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பற்று கொண்டவராகவே வாழ்து மறைந்திருக்கிறார். அவரது இழப்பு என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, தமிழ் சமுதாயத்திற்கே மாபெறும் ஈடுகட்ட முடியாத இழப்பு.
நடராஜன் உயிரோடு இருக்கும் போதே யாராவது ஒரு எம்.பி., கையெழுத்துப்போட்டிருந்தால் பரோலில் வந்து அவரை சசிகலாவால் பார்த்திருக்க முடியும். ஆனால் ஒரு எம்.பி.க்கள் கூட கையெழுத்து போடாதது மனவேதனை அளிக்கிறது.
எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின் நடராஜனின் மரணத்திற்கு மரியாதை செய்யும்போது, அரசியல் நாகரீகத்தோடு தமிழக முதல்வரோ அல்லது துனை முதல்வரோ இரங்கலை தெரிவித்து இருந்துருக்கலாம். அவர்கள் செய்யவில்லை. மனித நேயம் அற்றவர்களுக்கு கீழே நாம் இருக்கிறோம் என்பது பெரிய அவமானமாக உள்ளது. பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்று சொல்லும் ஒரு மிக பெரிய கூட்டத்திடம் சிக்கி கொண்டோம் என்பது பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நாகரிகம் அற்றசெயல் மரணத்தை விட கொடுமையாக உள்ளது என்றார்.