பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், மண்டபத்தில் நடைபெற்று வரும் மீனவர் நல மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். இதில் அவர்களுடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''2015 ஆம் ஆண்டு ஒன்றிய நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி இருந்த பொழுது ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்ட திட்டம் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. ஆனால் இன்று வரைக்கும் எய்ம்ஸ் செங்கல் தான் இருக்கு. மருத்துவமனை வரல. இப்பதான் அதற்கு டெண்டர் விட்டிருக்காங்களாம். அதாவது 2015 ஆம் ஆண்டு அறிவித்த எய்ம்ஸ் டெல்லியில் இருந்து உருண்டு இங்கு வரவே சுமார் 9 ஆண்டு காலம் ஆகிவிட்டது. இனியாவது அதிவிரைவாக கட்டி முடிப்பார்களா? அல்லது இதுவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாடகமா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டு முழுவதும் வசூல் செய்கின்ற பாஜக அரசுக்கு, ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித்தர மனசு இல்லை. இதையெல்லாம் நாம் கேட்பதால், திமுகவை கடுமையாக தாக்குகிறார்கள், பிரிவினையை தூண்டுவதாக திசை திருப்புகிறார்கள், பொய் சொல்கிறார்கள்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு என்ன பேசினார் 'ஒரு காலத்தில் நாம் திராவிட நாடு கேட்டவர்களாக இருந்தாலும், இன்றைக்கு இந்தியாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் இருக்கிறது' என்று சொல்லி இருக்கிறார். அது இந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்றுவதற்கான பேச்சே தவிர பிரிவினை எங்கே இருக்கிறது. இதை வெட்டி ஒட்டி வாட்ஸ் அப்பில் ஒரு குரூப் அனுப்ப, நாடாளுமன்றத்தில் பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் அனைவரும் அதைப் பற்றி பேசுகிறார்கள். ராஜாஜியும், காமராஜரும், எம்ஜிஆரும், அப்துல் கலாமும் வாழ்ந்த மண்ணில் பிரிவினைவாதமா என்று கேட்கிறார். நான் அடக்கத்துடன் சொல்கிறேன் திராவிட நாடு கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் திமுகவில் இருந்தவர் தான் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என வாய் அசைத்து பாடிக்கொண்டிருந்தவர்தான எம்ஜிஆர். இதைப் பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும்.
தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தக்கூடிய வாட்ஸ் அப்பில் வருவதை வரலாறு என நம்புவது பிரதமர் பதவிக்கு அழகு அல்ல. வகுப்பு வாதத்தை துளியும் ஏற்காதவர் காமராஜர். டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை கொளுத்த முயன்றது யார் என்பதை தெரிந்து கொண்டு பிரதமர் காமராஜர் பெயரை உச்சரிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். சொந்தக் கட்சியில் உள்ள தலைவர்கள் பற்றி பேசுவதற்கு, அங்கு தலைவர்கள் இல்லாத காரணத்தினால் மாற்றுக் கட்சி தலைவர்களை கடன் வாங்கி திமுகவை விமர்சிக்கிறார் பிரதமர் மோடி. இப்போதுதான் கனிமொழி சொன்னதால் சிலப்பதிகாரம் புத்தக முன்னுரையையே படிக்க ஆரம்பித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதை அவர் முழுமையாக படிக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவருக்கு ஓய்வு கிடைக்கும். அப்பொழுது சிலப்பதிகாரத்தை முழுமையாக படிக்க நேரம் கிடைக்கும். அதற்கு முன் நிதியமைச்சருடைய கணவர் எழுதியுள்ள புத்தகத்தில் 'மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு பேரழிவு இருக்கும்' என தெரிவித்துள்ளார். அந்த புத்தகத்தை ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் படிக்க வேண்டும்'' என்றார்.