நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கான தொடண்டர்கள் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். தீவுத்திடல் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில், விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கேப்டன் மறைந்த செய்தியை கேட்டு உடனே சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தார். அதை தவிர என்னை அழைத்து, உடனடியாக நீ கிளம்பி அங்கே போகவேண்டும்; இந்த துக்கத்தில் நாமும் பங்கேற்க வேண்டும். மத்திய அரசு சார்பாக அவர்களது குடும்பத்தை சந்தித்து ஆறுதலையும், இரங்கலையும் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். அதனால் உடனடியாக வந்து, வேதனையளிக்க கூடிய இந்த கூட்டத்திற்கு வந்து பிரதமரின் சார்பாக மலர் வளையம் வைத்து இரங்கலும் தெரிவித்தேன்.
கேப்டன் தனது வீட்டிற்கு வந்தவர்கள் யாரையும் சாப்பிடாமல் திருப்பி அனுப்பியது கிடையாது. அவரது மனம் மிகவும் இலகிய மனம். மற்றவர்களின் கஷ்டத்தை பார்க்க முடியாத மனம். அதனால்தான் அவருக்கு கிடைத்த அனைத்து வசதிகளும் மற்றவருக்கும் கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். ஒரு நேர்காணலில் கேப்டன், “நான் என்ன சாப்பிடுகிறேனோ அதைத்தான் என்னுடன் வேலை செய்யும் மற்றவர்களும் சாப்பிட வேண்டும்” என்று கூறுவார். அதனால்தான் தற்போது புது பழக்கமே உருவாகி இருக்கிறது. அப்படி மனித நேயமிக்க மனிதர்” என்றார்.