கல்லூரி மாணவிகளை பாலியல் வற்புறுத்தலுக்குள்ளாக்கும் கொடுமைக்கு உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் விசாரணைக்கு உத்தரவிடுக என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:
’’அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி சில மாணவிகளுடன் பேசிய ஒலிக் கோப்பு தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. பேராசிரியரின் பேச்சு இளம் பெண்களுடன் அவர் முதல் முறையாகப் பேசுவதாகவோ, இந்த இளம் பெண்களிடம் முயற்சிப்பதுதான் முதல் தடவை என்பதாகவோ புரிந்துகொள்ள முடியவில்லை. மிக மிக உயர் பதவிகளில் உள்ளோர், கவர்னர் தாத்தா இல்லை, ஆளுநரை அருகிலிருந்து வீடியோ எடுத்தது, தமிழ்நாடு அரசு தேர்வாணைய விடைத்தாள் திருத்தும் பணிக்கு தான் அழைக்கப்பட்டது, துணை வேந்தர் நியமனங்கள் எப்படி நடக்கிறது என்பதைப் பற்றிய பூடகமான பேச்சு, கல்லூரி மாணவியர் மறுத்த பிறகும் 'தனித்தனியாக நிதானமாக யோசித்துச் சொல்லுங்கள்' என்கிற வற்புறுத்தல், வங்கிக் கணக்கில் அதிக பணம் போடுகிறேன் என்கிற ஆசை வார்த்தை, மேல்படிப்பு எதுவானாலும் உதவி கிடைக்கும் என இவற்றையெல்லாம் கவனித்தால் இவை தனிநபர் ஒழுக்க மீறல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமே இல்லை என்பதும், இதுபோன்று வேறு பலரும், பாலியல் நடவடிக்கைகளுக்கு கல்லூரி மாணவியரிடம் வலைவிரிக்கும் வேலையைச் செய்துகொண்டுள்ளார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இது ஒரு பெரும் கிரிமினல் வலைப்பின்னலாக தெரிகிறது. ஆளுநர், அவரது அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுகிறது. நிர்மலா தேவி கருவியாக செயல்பட்டிருக்கிறார். அவரை பின்னிருந்து இயக்கியவர்கள் உயர் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
தென் மாநில ஆளுநர் ஒருவர் பாலியல் புகார்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், அதுகுறித்து உள் துறை அமைச்சகம் விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், சில வாரங்களுக்கு முன்னர் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதே சமயம் தமிழக ஆளுனர் தனது நியமனங்களில் நெறிமுறைகளை மீறி செயல்பட்டதையும் பார்க்க முடிந்தது. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் 'தகுதி, திறமையைத் தாண்டி' முறைகேடான கைமாறுகளுக்காக இவை நடக்கிறதோ என்கிற சந்தேகமும், கவலையும் எழுவது இயல்பே.
தமிழக அரசு உடனடியாக பேராசிரியர் நிர்மலாதேவியின் ஒலிக்கோப்பு மற்றும் நியமனங்கள் குறித்த அவருடைய பேச்சுக்கள் குறித்து குற்றவியல் வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், கல்லூரி மாணவியருக்கு வலைவிரிப்பது, ஆளுனரால் இந்தக் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட நியமனங்கள் இதற்கு பின் உள்ள சமூக விரோத கும்பல், இத்தகைய முறைகேடுகளில் உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளின் தொடர்பு உள்ளிட்ட அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். கல்வி நிலையங்களில் நடைபெறும் இத்தகைய கொடுமைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தன் வழக்காக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும். மேலும் இவைகள் குறித்து உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் நடைபெறக்கூடிய விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இத்தகைய விசாரணை முறையாக நடைபெற வேண்டுமெனில் சந்தேகத்திற்கு ஆளாகியுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. விசாரணை முடியும் வரையில் இந்த ஆளுனரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களையும், உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளையும் பணியிலிருந்து விலக்கிவைக்க வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
தமிழகத்தையே உலுக்கியுள்ள கல்லூரி மாணவிகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கும் இத்தகைய அநாகரீகமான போக்கினை எதிர்த்து முறியடித்திட தமிழகத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளும் போர்க்குரல் எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது.’’