அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை அடுத்த மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் மூன்று பேரையும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மூன்று பேரும் மதுரை மத்திய சிறைக்கு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். நிர்மலா தேவியை மகளிர் போலீசார் போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். முருகன், கருப்பசாமி ஆகியோரை இன்னொரு போலீஸ் வாகனத்தில் போலீசார் அழைத்துச் சென்றனர்.
முருகன், கருப்பசாமியை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம், கிருஷ்ணன்கோவிலுக்கு அருகே சென்றபோது எதிரே நாச்சியார்மில்லுக்கு சொந்தமான வேன் ஒன்று போலீஸ் வேன் மீது மோதுவது போல் வந்தபோது, போலீஸ் வேன் நிலைதடுமாறி ஒரு டாடா ஏசி வேனில் மோதியது.
நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன்
உடனே போலீசார் இறங்கி, டாடா ஏசி வாகனத்தின் டிரைவர் முருகானந்திடம், சத்தம் பேட்டனர். அவர், நீங்கதான் ஒழுங்காக வாகனத்தை ஓட்டவில்லை என்று பதிலுக்கு சத்தம் போட்டார். தொடர்ந்து மாறி மாறி இருதரப்புக்கும் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருந்தனர்.
இதனிடையே போலீஸ் வேனுக்கு பின்னால் காரில் வந்த முருகனின் உறபினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது முருகன் மனைவியின் தங்கை சுவிதா, போலீஸ் வேனுக்கு அருகே சென்று முருகனிடம் பேசினார். அப்போது முருகன், ''மயிரிழையில் உயிர் தப்பிச்சேம்மா...'' என்று கண்கலங்கியப்படி கூறினார்.
சுவிதா
பின்னர் நம்மிடம் பேசிய சுவிதா, ''எனது மாமா இந்த விபத்தில் தப்பித்தது பெரிய விஷயம். எனது மாமா உயிருக்கு ஆபத்து என்று சொல்லி வருகிறோம். திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி கொல்ல சதி நடக்குமோ என்ற பயம் எங்களுக்கு எழுகிறது'' என்று புகார் தெரிவித்தார். இந்த விபத்து சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சிறிது நேரம் பரபரப்பையும் பதட்டத்தையும் உண்டாக்கியது.