கேரளாவில் நிபா வைரஸ், பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் அவ்வப்போது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது.
பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் ஏற்பட்டால் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு சோதனைகள் நிகழ்த்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கேரளாவில் மருத்துவ கவுன்சில் குழுவினர் முகாமிட்டுள்ளனர். சிறுவனுடன் தொடர்பிலிருந்த 214 பேரில் 60 பேரை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதில் 14 பேருடைய பரிசோதனை மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சிறுவன் வசித்து வந்த மலப்புரம் பகுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினர் கேரளாவில் முகாமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சை பெற்றுவந்த 68 வயது முதியவர் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிபா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக கேரள தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவை வரும் வாகனங்களை மருத்துவ சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தலைமையில் நிபா வைரஸ் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மறு அறிவிப்பு வரும் வரை கோவை மாவட்ட எல்லையோர பகுதிகளைச் சேர்ந்த வாளையார், மாங்கரை உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் நிபா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.