Skip to main content

“போக்சோ வழக்கு; குற்றவாளியைத் தப்பவிட்டு.. சிறுமிக்கு கைவிலங்கு” - அன்புமணி ஆவேசம்

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

nilagris Pocso case anbumani condemn police
கோப்புப் படம்

 

“போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை தப்பவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதா? தவறு இழைத்த காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

 

இது குறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கமான எக்ஸில் தெரிவித்திருப்பதாவது; “நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை, நீதிபதியிடம்  வாக்குமூலம் அளிப்பதற்காக பெண் காவலர்கள் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும்  அளிக்கிறது. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்ணியமாக எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அரசியல் சட்ட அமைப்புகள் வழங்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட  சிறுமியை குற்றவாளியைப் போல நடத்தியிருப்பது கணடிக்கத்தக்கது.

 

இது தொடர்பான போக்சோ வழக்கில் எதிரியாக சேர்க்கப்பட்டிருப்பவர் தான் பாலியல் குற்றத்தை இழைத்தார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் போதிலும் அவரை கைது செய்ய காவல்துறை மறுக்கிறது. அவரின் பெயரைக் கூட ஊடகங்களுக்கு வெளியிட காவல்துறை மறுக்கிறது. பாலியல் குற்றவாளியை விருந்தினரைப் போல நடத்தும் காவல்துறை, பாதிக்கப்பட்டவரை குற்றவாளியைப் போல நடத்துவதைப் பார்க்கும் போது, அவரை அச்சுறுத்தி குற்றவாளியை காப்பாற்ற முயற்சிகள் நடக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

 

அதுமட்டுமின்றி, கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டதை வெளியில் செல்லக் கூடாது என்று பாதிக்கப்பட்ட சிறுமியை காவல்துறையினர் மிரட்டுவதாகவும், இது தொடர்பாக வெற்றுக் காகிதங்களில் சிறுமியிடமிருந்து கையெழுத்துப் பெற்று, அதையே  பயன்படுத்தி வழக்கை திரும்பப் பெறச்செய்ய காவல்துறையினர் மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. காவல்துறையினர் அடுக்கடுக்காக விதிமீறல்களில் ஈடுபடுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

 

தமிழ்நாட்டில் பெண்கள், குறிப்பாக குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படக் கூடாது என்பது தான் அனைவரின் விருப்பம் ஆகும். அதற்கு குற்றவாளிகள் தான் தண்டிக்கப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களை கண்டிக்க காவல்துறை முயலக்கூடாது. இந்த சிக்கலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரடியாக தலையிட்டு, சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற  காவலர் மீதும், அதற்கு காரணமாக காவல்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க ஆணையிட வேண்டும். பாதிக்கப்பட்ட  சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நீதி பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்