தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,
இந்த வழக்கில் 15 நாட்கள் விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா தற்பொழுது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் ஆகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் ஆஜரான மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சிபிசிஐடி ஐஜி உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் தொடர்பாக அவரது வீட்டில் விசாரணை நடத்தி வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தத ஐஜி சங்கர் கூறுகையில், “சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து நடுநிலையான ஒரு விசாரணை தொடங்கி இருக்கிறது. விசாரணை போகப்போக உங்களுக்கு முடிவு தெரியும். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாலை நேரத்திற்குள் உங்களுக்கு தெரிந்துவிடும் அல்லது இன்று இரவுக்குள் உங்களுக்கு முடிவு தெரியும். சாத்தான்குளம் தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை திருத்தம் செய்யப்படவுள்ளது. 12 குழுக்கள் அமைக்கப்பட்டு தரமான விசாரணையை பல கோணங்களில் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
மேலும் பென்னிக்ஸின் செல்போன் கடைக்கும் நேரில் சென்று சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டார்.