ஈரோட்டில் மரக்கடைஒன்றில் நல்ல பாம்பு புகுந்த நிலையில் பாம்பு பிடி வீரரால் பாம்பு பிடிக்கப்பட்டது.
ஈரோடு, நாராயணவலசு பகுதியில் பிளைவுட்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு பலகைகள், மர சாமான்கள் வைக்கப்பட்டுள்ளன. கடையில் இருந்து மரம் சாமான்களை சரக்கு வாகனங்களில் தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மரப்பலகை அடியில் இருந்து பாம்பு சத்தம் கேட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி வெளியே வந்தனர்.
இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு வந்து மரப்பலகைகளை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தபோது ஒரு மரப்பலகை அடியில் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு இருப்பது தெரிய வந்தது. பாம்பு அவரைக் கண்டதும் படம் எடுத்து ஆட தொடங்கியது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் யுவராஜா பாம்பை லாபகரமாக பிடித்து தான் கொண்டு வந்த சாக்கில் போட்டார். பின்னர் பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.