தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. இன்று திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் திடீர் விசாரணையில் ஈடுபட்டது. இந்த விசாரணை குறித்து விசாரித்தபோது, அண்மையில் கேரளாவில் சிக்கிய 300 கிலோ ஹெராயின், ஏ.கே 47 துப்பாக்கிகள் சிக்கிய வழக்கு தொடர்பாக இங்கு விசாரணை நடைபெறுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். மேலும் சிலர், தற்போது இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருவோர்க்கு இந்த முகாமில் இருப்பவர்கள் உதவுவதாகவும் அதன் காரணமாக இந்த விசாரணை நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு முழுக்க சென்னையில் மண்ணடி, பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட 9 இடங்களிலும், திருச்சியில் 11 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிந்த பிறகே முழுமையான தகவல்கள் வெளிவரும் எனச் சொல்லப்படுகிறது.