கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வந்துள்ள என்.ஐ.ஏ அமைப்பின் இயக்குநர் திங்கர் குப்தா தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக காவல்துறையுடன் இணைந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வது குறித்து இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான குற்றவாளியும் கோவையில் தங்கி இருந்ததும், உதகையைச் சேர்ந்த நபர் ஒருவர் அவருக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்த நிலையில், அது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் பேசப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.