உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று மாலை முதல் களைகட்டி வருகின்றன. இதனையொட்டி உலகின் முதல் நாடாக இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து உலகின் 2 ஆவது நாடாக ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. சிட்னி நகரில் மக்கள் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் இந்தியாவிலும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. கடற்கரைகள் போன்ற பொது இடங்களில் ஏராளமானவர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தலைவர்கள் பலரும் 2024 ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் “புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. "எல்லார்க்கும் எல்லாம்" என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும். அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “2024 புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.‘புத்தாண்டு 2024’ நம் அனைவருக்கும் மேலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொடுக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும். அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில் மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்திரராஜன், “நம் பாரத தேச மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு,புதிய ஆண்டின் தொடக்கமாக மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகவும் அமைய வேண்டும். இயற்கை சீற்றங்களால் நாம் சந்தித்த இடர்களைக் கடந்து 2024- புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராவோம். அன்பையும்,வாழ்த்துக்களையும் அனைவரோடும் பரிமாறிக் கொள்வோம். ஒற்றுமை உணர்வோடும் சமத்துவச் சிந்தனையோடும் பாரத தேசம் உலக அரங்கில் பீடுநடை போடும் வகையில் கடமையாற்ற உறுதி ஏற்போம். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “ எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.புதிய ஆண்டில் போர்கள் ஓயட்டும்; அமைதி நிலவட்டும்; சகோதரத்துவம் பரவட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.