
திருப்பத்தூர் அருகே நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் குறும்பச்சேரி பகுதியைச் சென்ற பலர் சின்ன வெங்காயபள்ளி கிராமத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் நிலத்தில் நெல் அறுவடை வேலைக்காக இன்று சென்றுள்ளனர். இதில் சசிகலா உட்பட ஐந்து பெண்கள் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது நெல்லையும் புற்களையும் தனியாக பிரிக்கும் பணிக்காக இயந்திரம் வரவழைக்கப்பட்டிருந்தது.
நெற்பயிர்களை இயந்திரத்தில் போடும் பணியில் அங்கிருந்தவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சசிகலா நெல் சுமையை தூக்கி இயந்திரத்தில் போடும்பொழுது அறுவடை இயந்திரத்தில் அவருடைய சேலை சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சசிகலா தூக்கி வீசப்பட்டு உடல் சிதைந்து உயிரிழந்தார். நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுநர் பயத்தில் தப்பி ஓடியுள்ளார். உயிரிழந்த சசிகலாவின் மகன்கள் மூன்று பேரும் அதே இடத்திலிருந்த நிலையில் கண்ணிமைக்கும் நொடியில் தாய் இறந்ததைக் கண்டு கதறி அழுதனர்.
உடனடியாக ஜோலார்பேட்டை போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் சசிகலாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல் அறுவடை இயந்திரத்தில் சேலை சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.